நிலம் என்னும் நல்லாள்


இன்னைக்கு காலையில் உபால் சார் கிட்ட இருந்து ஒரு குறுஞ்செய்தி. காஸ்ட்ரோஎன்டாலஜியின் மறுபக்கம் ஒரு தலைப்பில் நீ நம்ம இணையத்தளத்தில் எழுதனும் என்று கேட்டு இருந்தாங்க. என்ன சார் எழுத என்று கேட்டதற்கு, கேஸ்ட்ரோஎன்ட்ராலஜி தவிர நீ எது வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்லி முடிச்சதும் சரிங்க சார் என்று பதில் அனுப்பி விட்டு என்ன எழுதலாம் என்று யோசித்த போது இன்று காலையில் உடற்பயிற்சியின் போது கேட்ட கதை நினைவுக்கு வந்தது.
வழக்கமா டிரெட்மில்லில் ஓடும் போது யூ டியூபில் ஏதாவது உரை அல்லது கதை கேட்பது வழக்கம். நாம அந்த செய்தியில் ஆழ்ந்து இருக்கும் போது ஓடும் களைப்பு, நேரம் எதுவும் தெரியாது.
இன்று அதே மாதிரி யூ டியூப் திறந்து தேடும் போது கண்ணில் பட்ட தலைப்பு ஏநிலம் என்னும் நல்லாள்ஏ. இந்த தலைப்பு கொஞ்சம் வசீகரமாக இருக்கவும் அந்தக் காணொளியை திறந்து பார்க்க ஆரம்பித்தேன். இந்த கதை சொல்லியை உங்களுக்கு கண்டிப்பாக அறிமுகம் செய்ய வேண்டும்.
ஏபவா செல்லத்துரைஏ - திருவண்ணாமலையில் வசிப்பவர். தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டமைப்பில் முக்கியச் செயற்பாட்டாளர். சிறந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர். இவ்வளவும் தாண்டி இவர் ஒரு மிகச் சிறந்த கதை சொல்லி.
நாம் கதை கேட்கும் பழக்கத்தையெல்லாம் நமது பால்யத்திலேயே தொலைத்து விட்டோம். இப்போது குழந்தைகளுக்கு கதை சொல்லுவது என்றால் கூட யூ டியூப் போட்டு விட்டு அதில் வரும் நீதிக்கதைகளை கேட்டுக் கொள்ளுங்கள் என்று கைகாட்டி விட்டு அடுத்த தலைமுறையை கதை சொல்லல், கேட்டல் என்ற ஒரு பழக்கத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களை ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் கைகளில் நாம் கொடுத்து வெகு நாட்களாகி விட்டது.
டி எம் முடித்த பிறகு தமிழ் இலக்கிய வாசிப்பில் ஈடுபடும் போது முக நூல் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் இவர். இவரின் கதையைக் கேட்பது இப்போது எல்லாம் தினசரி வழக்கங்களில் ஒன்றாகி விட்டது. ‌எதற்கு கதை கேட்க வேண்டும்? தான் வாழ்ந்திராத ஒரு வாழ்க்கையை கண்ணுக்கு எதிரே காணும் போது, அந்தக் கதாபாத்திரங்களின் உணர்வுகளை அறியும் போது நீங்கள் வேற ஒரு உலகத்தில் இருப்பீர்கள். வேற ஏதாவது ஒரு சமயத்தில் நமக்கு அந்த மாதிரி நிகழும் போது நம்மால் அந்தச் சூழ்நிலையில் நம்மை இலகுவாகப் பொறுத்தி யோசிக்க இயலும்.
கதையை சொல்லுவது மட்டும் இல்லாது அந்த நிலத்தின் உணர்வுகளை நமக்கும் கடத்துகிறது இந்தக் காணொளி. இந்த கதையைக் கேட்ட பிறகு அந்தப் புத்தகத்தை தேடிப் பிடித்து வாசிப்பது புத்தகத்தின் வேற ஒரு பரிணாமத்தை நமக்குக் காட்டும்.
சரி கதைக்குள் வருவோம். அ. முத்து லிங்கம் எழுதிய நிலம் என்னும் நல்லாள். இந்த கதையின் சுருக்கத்தை கதை சொல்லி இரண்டு கவிதை வரிகளில் சொல்லி முடிக்கிறார். சுகுமாறன் எழுதிய ஏ தற்கொலையில் தப்பித்தவனின் அமைதிஏ மற்றும் சச்சிதானந்தம் எழுதிய ஏ நினைவில் காடு உள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாதுஏஇந்த இரண்டு வரிகளைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை.
ஒரு தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்தவனின் மனம் என்னவாக இருக்கும்? அவனிடம் இருந்து என்ன வார்த்தைகள் கிடைக்கும்? நாம் அனைவரும் இந்த ஒரு சமயத்தை கடந்து தான் வந்து இருக்கிறோம். தற்கொலைக்கு காரணம் என்ன என்று ஏ ஆர் என்டரி போடும் போது, தீராத வயிற்று வலி என்ற காரணம் டெம்ளடேட் ஆக எல்லாராலும் சொல்லப்படும் .
இதைக் கேட்டதும், அங்குள்ள செவிலியர், மருத்துவர் அனைவரது முகத்திலும் ஒரு சின்ன புன்னகை தோன்றும். வேற ஏதாவது காரணம் சொல்லுங்க என்று அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒரு முறை கேட்கும் போது நமக்கு பல இடங்களில் மெளனமே பதிலாக தரப்பட்டு இருக்கிறது. அந்த மெளனத்தை நாம் எவ்வாறு மொழிபெயர்க்க இயலும்? மெளனம் சம்மதம் என்ற அர்த்தமா? எனக்கு எதுவும் சொல்ல பிடிக்கவில்லை என்ற அர்த்தமா? என்னிடம் எதுவும் கேட்காதீர்கள், என்ற வாக்கியமா? என்னைத் தனியாக என்னுடைய உணர்வுகளுடன் இருக்க விடுங்கள் என்ற வேண்டுகோளா? இப்படி எது என்று பிரிக்க முடியாத எல்லாம் கலந்த கலையாக அந்த உணர்வுநிலை இருக்கும். இந்த நேரத்தில் இதை நாம் புரிந்து கொண்டு அமைதியாக, தலை கோதி ஆதரவாக இருப்பது விட வேறு எந்த மறுமொழியும் பதிலாக தர இயலாது.
இது உயிரைப் போக்கிக் கொள்ளும் தற்கொலையை மற்றும் குறிப்பது அல்ல. நமக்கு பிடித்த ஒன்றை நாமே சில காரணங்களுக்காக இழந்தாலும் இந்த மாதிரி ஒரு நிலையில் இருப்போம். யாரிடமும் சொல்ல முடியாத நிலை ஒன்று. தன்னாலேயே அந்த துயரத்தை கடக்க முடிவு செய்து தனக்குள்ளே புதைத்துக் கொண்டு, வழக்கமான மற்ற வேலைகளில் ஈடுபடும் நேரங்களில், கண்டிப்பாக ஒரு உற்ற நண்பனாய் அதை கண்டு கொள்ள இயலும். அப்படி கண்டு கொண்டாலும் அது பற்றி நோண்டி எதுவும் கேட்காமல், தன்னால் வெளியே வரும் வரை ஆதரவாக கூட இருந்தால் மட்டும் போதும் என்று தோன்றுகிறது.
ஏனெனில் ஏநினைவில் காடு உள்ள மிருகத்தை எளிதில் பழக்க இயலாதுஏ என்று அடுத்த வரிகள் பின்னாடியே வருகிறது. இது என்ன மிருகத்தை குறிக்கும் வாக்கியமா?
ஆமாம் மனிதனும் ஒரு சமூக விலங்கு தான். மிருகத்தின் இயல்பு காட்டில் அலைவது. காடு பழக்கப்பட்ட எந்த ஒரு மிருகமும் தன் வாழ்நாள் முழுவதும் அதை நினைவில் வைத்து இருக்கும்.
ஒரு நண்பன் துக்கமாக இருக்கிறான் என்று தெரிய வரும் போது, அவனை நார்மல் ஆக்குகிறேன் என்று நினைத்துக் கொண்டு, வெளியே அழைத்துச் செல்வதும், அவனுக்கு தேவையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நாம் வாங்கிக் கொடுப்பதும் எதுவும் அவன் விருப்பம் இல்லாமல் நடைபெறும் போது அவன் அந்த உலகில் இருந்து வெகு தூரம் செல்கிறான்.
ஒருவன் ஒரு வாழ்க்கையில் இஷ்டப் பட்டு வாழும் போது, இது சமூகத்திற்கு உகந்தாக இல்லை என்று நம்முடைய அளவீடுகளை அவன் மீது திணிப்பது தவறு என்பது உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி திணிக்கும் போது அவனது உணர்வுகள் அவனை வேறு பாதையில் இழுத்துச் செல்லும் என்பதே இந்த கதை நமக்குச் சொல்கிறது.
இந்த முன்னோட்டத்துடன் இந்த கதையை கேட்கவும். கதை சொல்லும் உணர்வை அனுபவிக்கவும். எல்லோருக்கும் ஒரே மாதிரி உணர்வைத் தராது. இருந்தாலும் உங்களுக்கு இதை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. தங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லவும்.
- அன்புடன்
DR.M.இராதா