Q(க்யூ)


நான் காலேஜ் படிச்சதில் இருந்து தான் இந்தக் கதையை ஆரம்பிக்கனும். அஞ்சு வருஷம் வகுப்பறையில் உட்கார்ந்து படித்து விட்டு, முதன் முறையாக, நாமளே உட்கார்ந்து நோயாளிகள் கிட்ட கதை கேட்டு, என்னவாக இருக்கும் என்று முடிவு செய்து, அதற்கு மாத்திரை எழுதிக் கொடுத்து அவங்க சரியாகி விட்டது என்று வந்து சொல்லுவது கேட்கும் போது, ஒரு செடி நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்து ஒரு பூ பூக்கும் போது அந்தப் பூவை நாம் மலர்ச்சியுடன் நோக்கும் உணர்வுக்கு நிகரானது அந்த நிகழ்ச்சி.
இப்படி ஹவுஸ் சர்ஜன் போஸ்டிங்ல நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத அனுபவமா மாறும். என்னுடைய ஹவுஸ் சர்ஜன் போஸ்டிங்ல தான் என் வாழ்நாள் முழுமைக்குமான நண்பர்கள் நான் பெற்றேன். அவங்க கூட ஊர் சுத்தியதெல்லாம் வாழ்நாள் அனுபவங்கள். அதுல சிறந்ததாக சொல்லுறது, டாப் சிலிப் உச்சியில் நடு இரவு பனிரெண்டு மணிக்கு கேக் வெட்டி 2000 நியூ இயர் மில்லினியம் செலிபரேஷன் பண்ணினது தான். அந்த இரவு, காடு, ஆடல், பாடல், நண்பர்களோடு கழித்த அந்த இரவு. அதைவிட அதற்கு முதல் நாள் கிளம்புவதற்கு, அறுவைச் சிகிச்சை பிரிவில் சண்முகம் சார் கிட்டவும் ரவீந்திரன் சார் கிட்டவும் பர்மிஷன் வாங்கினது, அடுத்த நாள் கோவை எக்ஸ்பிரஸ்ல சென்னை வந்து முதல் all india pg entrance எழுதினது, அதற்கு பின் மெரினா பீச் திரும்பவும் ஹாஸ்பிடல் என்று ஒரு நீண்ட பயணம் சாத்தியமானது அந்த நாட்களில் தான்.
அந்த சமயத்தில் எங்க காலேஜ்ல பிஜி கிடையாது. நாங்க, அப்புறம் அசிஸ்டெண்ட் ப்ரோபெசர் மட்டும் தான். நான் திருச்சியில் எம் டி ஜாயின் பண்ணும் போதும் நாங்க தான் முதல் செட் மாணவர்கள். எங்களுக்கு சீனியர் இல்லை. ஏற்கனவே பிஜி, ஹவுஸ் சர்ஜன் அனுபவம் இல்லை. அதனால நான் பிஜியா போன பிறகும் இந்த வரிசை மெயின்டெய்ன் பண்ண எல்லாம் தெரியல. என் யூனிட்ல எனக்கு கீழே ஹவுஸ் சர்ஜனா வர்றவங்கள எல்லாம் என்னுடைய கொலீக்கா தான் டிரீட் பண்ணுறது வழக்கம். அதுவும் M4 unit ல எங்க மெடிசின் அசிஸ்டென்ட் ப்ரோபெசர் எல்லாரும், என்னை கொலீக்கா நினைச்சு நடத்தின சமயம் அது.
இந்த பசங்களோட எப்போதும் சிரிப்பும் சந்தோசமாகவும் இருக்கும். வியாழக்கிழமை எங்க அட்மிஷன் டே வரும். அன்னைக்குத் தான் ஹோட்டல் பெமினால இசிஜி, எக்கோ கிளாஸ் வெளியே ஒரு புகழ் பெற்ற கார்டிலஜி இந்த ஹவுஸ் சர்ஜன் பசங்களுக்கு சொல்லித் தருவாங்க. நாங்க எல்லாம் கிளாஸ்க்கு போகனும். போயிட்டு வர்ற வரை நீங்க மட்டும் தான் இந்த டிஆர் வார்டு பார்த்திக்கனும், அசிஸ்டெண்ட் வந்தா சாப்பிட அனுப்பி இருக்கேன்னு சொல்லுங்கன்னு என்னை மட்டும் தனியா விட்டுட்டு பசங்க எல்லாம் கிளம்பிடுவாங்க.
எத்தனை தான் நாம வார்டுல சொல்லித் தந்தாலும், அவங்க இதுக்கு ன்னு தனியா போய் உட்கார்ந்து அந்த சூழலில், அந்த சத்தத்துடன் கவனிக்கும் போது கண்டிப்பாக அவங்களுக்கு உள்ள போகும் னு தோணுச்சு. அதனால கிளாஸ்க்கு போறேன் ன்னு எந்த ஹவுஸ் சர்ஜன் கேட்டாலும் அனுப்பிட்டு தனி ஆளா அங்க டிஆர் வார்டுல உட்கார்ந்து இருந்த காலங்கள் அதிகம். அவங்க வரும் முன்பு அவங்க வேலையும் சேர்த்து முடித்து வைத்து இருப்பேன்.
வந்த பிறகு அவங்க கிட்ட இருந்து நாம கேட்கிற வேலை எல்லாம் கிடைக்கும். எப்பவும் சிரிச்சிக்கிட்டே அடுத்தவங்கள ஓட்டிட்டு ஒரு மாதிரி சந்தோஷமான காலங்கள் அவை. நைட் விடிய விடிய வேலை செஞ்சுட்டு அடுத்த நாள் ரவுண்ட்ஸ் முடிச்ச பிறகு மதியம் தூங்கி எழுந்த பிறகு போன் வரும், மேடம் சாயந்திரம் படம் போக டிக்கெட் புக் பண்ணி இருக்கோம், வந்து சேருங்கன்னு தகவல் வரும். இப்படி முதல்ல பார்த்த படம் நான் கடவுள். அப்புறம் வில்லு, அப்படியே இந்த டீம் இருக்கும் வரை வாரம் வாரம் படம் கன்டினியூ ஆச்சு.
இதுல இந்த பசங்க கிட்ட மெடிசின் பத்தி பேசிப்பேசி ரெண்டு பேர் ஜெய பாலாஜி, ஆர்கேவும் எம்டி ஜெனரல் மெடிசின் அடுத்த வருடம் சீட் எடுத்தாங்க. இதுல ஆர் கே எம் எம்சில எம் டி படிக்கும் போது கேஸ்ட்ரோ போஸ்டிங் வந்து பார்த்துட்டு நான் கேஸ்ட்ரோ தான் எடுப்பேன்னு அடுத்த வருடம் டி எம் கேஸ்ட்ரோ எடுத்தான்.
இப்ப எதுக்கு இந்த கதை எல்லாம் என்று கேட்கிறவங்களுக்கு, நேற்று கிண்டிலில் Q க்யூ என்ற ஒரு கதை படித்த பிறகு இந்த ஹவுஸ் சர்ஜன் பிஜி ரிலேஷன்ஷிப் பற்றி எனக்கு உள்ள ஓடின உணர்வுகள் தொகுப்பு தான் இந்த பதிவு. இதுல குழந்தைகள் வார்டுல போஸ்டிங் போட்டு இருக்கும் ஹவுஸ் சர்ஜன் பொண்ணு ஒரு பாப்பாவுக்கு மருத்து கொடுத்து டியூட்டி பார்கிறதில் இருந்து நாவல் ஆரம்பிக்கிறது.
அந்த பாப்பா சிக் ஆகி ஐசியூக்கு ஷிப்ட் பண்ணி அங்கே இறந்திடுறது. இந்த ஹவுஸ் சர்ஜன் பொண்ணு அந்த பாப்பா இறந்ததில் சோகமாகி, ஏன் இறந்தது என்று காரணம் தேடி மைக்ரோ லேப்ல இருக்கும் பிஜி கிட்ட போய் கேட்கிறது தான் கதையோட ஆரம்பப் புள்ளி. இந்த கேள்விக்கு விடை இந்த நாவலோடு பயணிக்கிறது.
சுஜாதா பாலகுமாரன் புத்தகம் தேடித் தேடி படிச்சிட்டு இருந்த எனக்கு முதன்முறையாக ஆங்கில புத்தகம் அறிமுகம் ஆனது எம் பி பி எஸ் இரண்டாம் ஆண்டு . மில்ஸ் அன் பூன்ஸ், இந்த புத்தகம் ஹாஸ்டலில் எல்லா ரூம்லையும் சுத்தி வரும். இந்த ரவுண்டு முடிஞ்ச பிறகு அடுத்த வருவது ராபின் குக் நாவல்கள் தான். அதுல முதல்ல படிச்சது காட் ப்ளேயர், அப்புறம் அவரோட சீரிஸ் போகும். பீவர் தான் கடைசியா படிச்சது. இந்த ராபின் குக் நாவலில் அமெரிக்காவில் உள்ள மருத்துவ மனை அமைப்புகள், அங்கு உள்ளவர்களின் வேலை நேரங்கள் பழக்க வழக்கங்கள் எல்லாம் பதிவு செய்யப் பட்டு இருக்கும்.
எனக்கு இந்த க்யூ நாவல் படிக்கும் போது ராபின் குக் நாவல்களஅன் அமைப்பு தான் நினைவுக்கு வந்தது. இந்த க்யூ நாவல் நடக்கும் கதை களம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி. ஒரு மைக்ரோ பயாலஜி பிஜி, ஐசியூ போஸ்டிங்ல இருக்கும் ஹவுஸ் சர்ஜன், இவங்க நடுவில் இருக்கும் ரிலேஷன்ஷிப், ஐசியூல நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை போகுற போக்கில் சுவைபட எழுதி இருக்காங்க.
//இந்த ரெண்டு நாள்ல நாலு டெத் பார்த்துட்டேன், எல்லாத்துக்கும் சம்பந்தம் இருக்கும் மாதிரி சந்தேகமா இருக்கு// ன்னு அந்த ஹவுஸ் சர்ஜன் பொண்ணு சொல்லவும், இதுக்கு பேர் "இன்டர்ன்ஸ் சிண்ட்ரோம்," எதைப் பார்த்தாலும் நமக்கு இருக்கிறதா சந்தேகப் பட தோணும் ன்னு சொல்லவும், இல்ல எல்லாரையும் மருந்து போட்டு கொல்லுவாங்கல்ல அந்த மாதிரி... அந்த பொண்ணு திரும்ப இழுக்கவும், "ஏன் நேற்று ராபின் குக் நாவல் படிச்சியா?" ன்னு சிரிச்சிட்டே கிண்டல் அடிக்குற இடத்துல நான் ஒரு நிமிஷம் படிக்கிறது நிறுத்தி சிரிச்சுட்டு நான் ராபின் குக் படிச்ச காலகட்டத்துக்கு போய் வந்தேன்.
கேண்டின், ஐசியூ, கார் பார்க்கிங், செமினார் ஹால், இந்த இடங்கள் மட்டுமே இந்த நாவலில் வரும் முக்கிய இடங்கள். இவை நானும் தஞ்சாவூர் கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்யும் போது புழங்கிய இடங்கள்.
அவங்க ரெண்டு பேரும் கேண்டின்ல உட்கார்ந்து பேசுற இடங்கள் எல்லாம் யாரோ நமக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பேசுறது மாதிரி இருந்திச்சு. இந்த மாதிரி கேண்டின்ல டீ குடிக்க போறது பத்தி எழுதனும்னா அதுக்கு தனியா பத்து போஸ்ட் எழுதலாம். Most happening place in a medical college ல எடுத்தா அதுல கேண்டீனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
ஒரு மெடிக்கல் பிக்சன் இதுவரை நான் தமிழ்ல படிச்சதே இல்லை. அதுவும் ராவா, லோக்கல்லா நம்ம ஊர்ல நடக்கும் விஷயங்களை அப்படியே எழுதுறது எல்லாம் வேற லெவல். ராபின் குக்க விமர்சனம் பண்ணிக்கிட்டு அந்த மாதிரி பிக்சன் டிரை பண்ணிட்டு இருக்கிறது எல்லாம் அல்டிமேட்.
மருத்துவர் மயிலன் சின்னப்பன் எழுதும் வியாழப் பிரதில தான் மருத்துவமனை பற்றிய கதைகள் படிச்சு இருக்கேன். ஆனால் மெடிக்கல் பிக்சன், ஒரு த்ரில்லராக படிச்சது உண்மையில் இந்த நாவலில் மட்டும் தான்.
இதை எல்லாம் இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம் என்று மட்டும் தான் தோணுச்சு. #pentopublish கண்டு பிடிச்ச மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் கண்டிப்பா பொன்ராமருக்கும் இடம் உண்டு.
#pentopublish ன்னா என்னன்னு கேட்கிறவங்களுக்கு அமேசான் நிறுவனம் நடத்தும் கிண்டில் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு நடத்தும் போட்டி. அதில் பங்கு பெற்ற நாவல்களை படிக்கும் போது இந்த நாவலின் லிங் கிடைத்தது.
#pentopublish ல இப்படி ஒரு அட்டகாசமான மெடிக்கல் பிக்சன் படிப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல. ஏற்கனவே டவுன் லோடு பண்ணின புத்தகம் எல்லாம் படித்த பிறகு வேற ஏதாவது புத்தகம் இருக்கான்னு கமெண்ட்ஸ் பண்ணுங்கன்னு கேட்டதுக்கு Q புத்தகம் வந்து லிஸ்ட்ல ஆட் ஆச்சு. இந்த புத்தகம் எழுதினவங்களை எனக்கு ஏற்கனவே அறிமுகம் கிடையாது. அவங்க எப்படி வந்து லிங்க் கொடுத்தாங்கன்னு யோசிக்கல. கண்டிப்பாக லிங்க் கிடைக்கலனா இந்த புத்தகம் மிஸ் பண்ணி இருப்பேன். ஒவ்வொரு அத்தியாமும் படிச்ச பிறகு அந்த இடமும் அந்த டயலாக் எல்லாம் கண்ணு முன்னாடி அப்படியே ஓடியது.
இந்த கதையில் வரும் இடங்கள் நான் நடமாடிய எனக்கு மிகவும் பழக்கப்பட்ட இடங்கள். நாம நடமாடிக்கிட்டு இருக்கும் இடத்தில் முன்னூறு நானூறு வருடங்களுக்கு முன்பு இருந்த பாண்டிய மன்னர்கள் என்ன செய்து கொண்டு இருப்பார்கள் என்ற கற்பனை தான் இந்த நாவலின் ஒன் லைன் ராபின் குக் கதைகள் படிச்சவங்க, டாக்டர் சீரிஸ் பார்த்தவர்களுக்கு இந்த கதை கண்டிப்பாக பிடிக்கும். மருத்துவனையில் நடைபெறும் சம்பவங்களை மாணவரின் பார்வையில் எழுதியது வேற ஒரு கோணம். உண்மையில் அங்கு நடைபெறும் சம்பவங்கள் இந்த கோணத்தில் தான் அங்கு இருப்பவர்களால் பார்க்கப் படும்.
"" பத்து நிமிடத்தில் குளித்து கிளம்பி, கோட், ஸ்டெத் எல்லாம் எடுத்துக் கொண்டு பக்கத்து வார்டில் கடன் வாங்கிய ஆக்மெண்டின் ஆம்யூலையும் மறக்காமல் எடுத்து கொண்டு, இரண்டு இட்லியும், நிற்காமல் காபியையும் கையில் வைத்து குடித்து கொண்டு 7.30 மணிக்கு வார்டுக்குள் நுழைவது ஹர்ஸ் சர்ஜனால் மட்டுமே சாத்தியம் "" என்ற வரிகள் எல்லாம் ஒரு முறை நமது ஹவுஸ் சர்ஜன் காலத்தை கண் முன் கொண்டு வந்து காட்டுகின்றது. மருத்துவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் சம்பவங்களை புதிதாக கதை சொல்லுகிறது.
வரலாறு சம்பவங்கள், கேண்டீனில் உள்ள காதல் காட்சிகள், ஐசியூ காட்சிகள், மருத்துவ அறிவு எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு அட்டகாசமான மருத்துவ புனைவு நாவல் பகுதியை தமிழ் இலக்கிய உலகில் ஆரம்பித்து வைத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு வெப் சீரிஸ்க்கு உள்ள அனைத்து தகுதிகளும் இந்த நாவலில் உள்ளது.
முதன்முறையாக தமிழில் கிண்டில்(kindle) நாவல் படிக்க ஆரம்பிக்கிறார்கள் இந்த நாவலில் இருந்து ஆரம்பிக்கலாம். நமக்கு தெரிந்த ஏரியாயில் நடக்கும் கதை எப்படி நாவலாக உருமாறுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். It is another side of CPC ன்னு தான் படிச்சதும் தோணினது.
-அன்புடன்
DR.M.இராதா